மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று, NCERT பாட புத்தகங்கள் இனி அமேசான் flipkart போன்ற வலைத்தளங்கள் மூலம் ஆர்டர் செய்து பெற்ற கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
பொறியியல் படிப்பிற்கான JEE அகில இந்திய நுழைவு தேர்வுகளும் இனி கணினி முறையில் நடத்தப்படும் என்றும் நீட் தேர்வையும் கணினி முறையில் நடத்த சுகாதாரத் துறை கோரிக்கையின் அடிப்படையில் கல்வித் துறை உரிய வழிவகை செய்யும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பதாவது :-
மாணவர்களின் நலன் குறித்தும் தேர்வு குறித்த அழுத்தத்திலிருந்து விடுவித்தல் குறித்தும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தேர்வுக்கான பயிற்சி மையங்கள் இதற்கான காரணியாக உள்ளது. இத்தகைய நிலையில், அவை வணிகமயமாக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழு – சியூஇடி(க்யூட்) தேர்வுகளை எளிமையாக்குவது குறித்து அரசு செயலாற்றி வருகிறது.
நுழைவுத் தேர்வுகளைப் பொருத்தவரையில், தொழில்நுட்பம் சார்ந்து தேர்வுகளை நடத்த அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கணினி வழியில் நுழைவுத் தேர்வுகள் நடத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய கல்வி முறையை சர்வதேச தரத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 3 பேர் கொண்ட உயரதிகார செயல் குழு ஒன்று பேராசிரியர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, கடந்த அக். 21-இல் அரசிடம் அதன் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் 101 பரிசீலனைகளை தெரிவித்துள்ளதாக கூறியிருக்கிறார்.
குறிப்பாக, அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்கள் மீது நிதிச்சுமை ஏதும் இருக்காது. கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய குழு(என்சிஇஆர்டி), 15 கோடி தரமான புத்தகங்களை விற்பனைக்காக வெளியிடும். இதற்காக என்சிஇஆர்டி அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஆன்லைன் தளங்களில் பாடப்புத்தகங்கள் அவற்றின்எம்ஆர்பி விலையில் விற்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.