தமிழக இளைஞர்களை ஏமாற்றிய வடமாநிலத்தவர்! ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரயில் பெட்டியை எண்ணவிட்டு மோசடி !

0
131

நாட்டில் வேலையின்மை ஒருபுறம் அதிகரித்து வருகிறது இதனை பயன்படுத்தி பல மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். அரசு வேலை வாங்கி தருகிறேன், பெரிய நிறுவனத்தில் வேலை வாங்கி தருகிறேன் என்றெல்லாம் பொய் கூறி மோசடிக்காரர்கள் அப்பாவி மக்களிடம் பணத்தை கொள்ளையடித்து விடுகின்றனர். மக்களும் தங்களுக்கு எப்படியாவது வேலை கிடைத்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் பணத்தை கொடுத்து ஏமாந்துவிடுகின்றனர். வேலை மோசடி குறித்து நாம் பல செய்திகளை கேட்டறிந்து வரும் நிலையில் டெல்லியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் பண மோசடி செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரயில் நிலையத்தில் சில இளைஞர்கள் கையில் நோட்டை வைத்துக்கொண்டு, ஏதோ எழுதிக்கொண்டு சில நாட்களாக வந்துபோவதை ரயில்வே அதிகாரிகள் கண்காணித்துள்ளனர். இளைஞர்கள் மீது சந்தேகப்பட்டு அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த இளைஞர்கள் தங்களுக்கு ரயில்வேயில் வேலை கிடைத்திருப்பதாகவும், அதற்கான பயிற்சியில் தான் தாங்கள் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். தினமும் 8 மணி நேரம் வந்து ரயில் பெட்டிகளை எண்ணி கணக்கெடுக்க வேண்டும் இதுதான் எங்கள் வேலை என்று தெரிவித்துள்ளனர். இதனை கேட்ட அதிகாரிகள் அப்படியொரு வேலையே இல்லை என்று கூறிய பின்னர் தான் தாங்கள் ஏமாந்திருப்பது அந்த இளைஞர்களுக்கு தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது, அந்த விசாரணையில் இளைஞர்கள் கூறுகையில் விருதுநகரை சேர்ந்த ஒருவர் மூலமாக தங்களுக்கு ராணா என்பவர் பழக்கம் கிடைத்ததாகவும், அவர் தங்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்தது பற்றி கூறியுள்ளனர். அந்த மோசடி நபரிடம் கிட்டத்தட்ட 28 அப்பாவி இளைஞர்கள் சுமார் ரூ.2 கோடிக்கும் மேல் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர்.