18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது.
இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு மெக்கானிக்கல் பட்டதாரி ஆவார். இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி என்பவரை காதலித்து வந்தார். இவருக்கு வயது இருபத்தி இரண்டு.
வீட்டில் எப்படியும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என நினைத்து இருவரும் அவர்களாகவே திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து இருவரும் கடந்த 5.5.2003 ஆம் ஆண்டு கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சாதி எதிர்ப்பு திருமணம், பெற்றோர்களுக்கு தெரியாமல் துணிந்து திருமணம் செய்து கொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித்தனியே வாழ்ந்தனர்.
ஒரு கட்டத்தில் முருகேசன் தனது காதல் மனைவி கண்ணகியை விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துரைப் பட்டியில் உள்ள தனது உறவினர் ஒருவரது வீட்டில் தங்க வைத்தார். அவர் ஸ்ரீ முஷ்ணம் அருகே உள்ள வண்ணன்குடிகாட்டில் உள்ள வேறொரு உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.
கண்ணகியை அவரது வீட்டில் காணாத காரணத்தினால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை தேடி ஊரெல்லாம் சென்று வந்தனர். அப்போது அவர்களது காதல் விவகாரம் வீட்டில் தெரிந்தது. எனவே முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை எட்டாம் தேதி முருகேசனையும், அதேபோல் மூங்கில்துறைப்பட்டில் இருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர்.
அதன் பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று அந்த கொடுமைகளை அரங்கேற்றி உள்ளனர். அங்கு வந்த அவர்கள் இருவருக்கும் மூக்கு மற்றும் காது வழியாக விஷத்தை செலுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் இறந்த பிறகு கூட அவர்களது சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.
என்ன ஒரு ஜாதி பாகுபாடு பார்த்தீர்களா? மனச்சாட்சியே இல்லாமல் கொன்றுவிட்டு தனித்தனியாக வைத்து எரித்துள்ளனர். இவர்கள் என்ன ஒரு வன்மையான மனிதர்கள். இந்த சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருதாச்சலம் போலிசில் தெரிவித்த போது போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அந்த சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் குறியாக ஈடுபட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அடுத்து சில நாட்கள் கழித்து இந்த இரண்டு கொலைகளும் சாதி ஆணவத்தின் காரணமாக நடத்தப்பட்டது என்று பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு விருதாச்சலம் போலீசார் வழக்கில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சாதி மாற்றி திருமணம் செய்ததன் காரணமாக இருவரது வீட்டிலும் அவர்களது பிள்ளைகளை அவர்களே கொன்று விட்டதாக கூறி இருவரது வீட்டிலும் நான்கு பேர் என்று பொய்யாக கைது செய்து வழக்கை முடிக்க பார்த்தனர்.
ஆனால் இது ஆணவ கொலை என்றும், இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, மற்றும் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்த்தது.
இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனபால் அமர்வு நீதிமன்றத்தின் முன்பு இன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் 13 பேரும் குற்றவாளிகள் எனவும், கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
மேலும் ஒருவருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி சரியான உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. மேலும் முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி, குணசேகரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ஆகியோர் உட்பட 12 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.