திமுக அமைப்புச் செயலாளர் இன்று ஆர்.எஸ் பாரதி அதிகாலை அவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசிய RS.பாரதி, “தலித் மக்கள் கூட இன்று நீதிபதியாக முடியும் என்பது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை” என்றார். மேலும் பத்திரிக்கையாளர்களையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அவரின் அந்த பேச்சுக்கு அப்போதே கடும் கண்டனங்கள் கிளம்பியது. மேலும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென RS பாரதி வீட்டிற்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட மத்திய குற்றப் பிரிவு காவல்துறை அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். நீதிபதியின் வீட்டில் திமுகவின் வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதியை பிணையில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடி வந்தனர்.
இதனையடுத்து ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் RS பாரதியின் கைதை கண்டித்து திமுகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். RS பாரதியை விடுவிக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.