Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊழல் அமைச்சர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்க! கீ.வீரமணி வலியுறுத்தல்!

K Veeramani

K Veeramani

ஆட்சியில் இருக்கும் போது, முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மீது பல்வேறு புகார்கள் வருகின்றன. அவற்றை விசாரிக்கும் நீதிமன்றங்கள், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து பன்மடங்கு கூடுதலாக சம்பாதித்து அவர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியாகவே உள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அமைச்சர்கள் மீதும், முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ஆய்வு செய்தனர்.

அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய திராவிர் கழகத் தலைவர் கீ.வீரமணி, முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் ஊழல் செய்த அனைவரது சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஊழல் செய்தவர்களின் சொத்துக்கள் உள்நாட்டில் இருந்தாலும் சரி, வெளிநாடுகளில் இருந்தாலும் சரி, அனைத்தையும் அரசுடமை ஆக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னமும் அதிகாரியைப் போன்று நடந்துகொள்வதாக தெரிவித்த ஆசிரியர் கீ.வீரமணி, அவர் இன்னும் அரசியல் தலைவரைப் போன்று மாறவில்லை என்பது, பேச்சில் இருந்து உணர முடிகிறது என்றார்.

முன்னாள் அமைச்சர்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அதிமுகவினரைக் குறிக்கும். ஆனால், இந்நாள் அமைச்சர்களும் என்று குறிப்பிட்டிருப்பதால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கையும் சேர்த்துத்தான், கூறியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

Exit mobile version