கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்! விசாரணையில் இறங்கியது சிபிசிஐடி காவல்துறை!

0
126

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13ஆம் தேதி விடுவதின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அவர் எழுதி வைத்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது.

இந்த கடிதத்தினடிப்படையில் அந்த பள்ளியில் வேலை பார்க்கும் 2 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்திருக்கிறார்கள். அதன் பிறகு அதுவரையில் தற்கொலையாக பதிவு செய்யப்பட்டிருந்த அந்த மாணவியின் வழக்கு தற்போது தற்கொலைக்கு தூண்டுதல் என்ற பெயரில் மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று வரையில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பாக இருந்து வரும் மர்மத்தை விளக்குமாறு நடந்த போராட்டம் நேற்று திடீரென்று வன்முறையாக வெடித்தது.

இந்த நிலையில், அந்த தனியார் பள்ளியில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதோடு பள்ளி வளாகங்களுக்கும் தீ வைத்தனர்.

அதோடு அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த மாணவியின் இறப்பில் சந்தேகம் இருக்கிறது என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஆனால் தற்போது நடைபெற்று வரும் வன்முறைக்கும், தங்களுக்கும், எந்த விதமான சம்பந்தமும் இல்லை.

நாங்கள் அமைதியான முறையில் தான் போராட்டம் நடத்தி வந்தோம். திடீரென்று இந்த வன்முறையாளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை என உயர்நீதிமன்றத்தில் அந்த மாணவி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கை நேற்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஆகவே இன்று காலை அந்த மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலும் நீதிமன்றம் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தது. அதாவது உடனடியாக இந்த வழக்கை விசாரித்து உரிய தீர்வு காண வேண்டும் அனைத்தும் எங்களுடைய நேரடி கண்காணிப்பில் நடக்கும் நாங்கள் காவல்துறையினரை கண்காணித்து தான் வருகிறோம் என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கு தொடராக தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அவர்கள் விசாரணையில் இறங்கினால் பல உண்மைகள் வெளிவரலாம் என்று தெரிகிறது.

அதாவது அந்த மாணவி கடந்த 1ம் தேதி தான் அந்த பள்ளியில் வந்து சேர்ந்திருக்கிறார். அதற்குப் பிறகு அந்த பள்ளியில் அவருக்கு என்ன நடந்தது? என்னென்ன அசகுரியங்கள் அந்த மாணவிக்கு நிகழ்ந்தது. அந்த மாணவியை துன்புறுத்தியது யார்? என்பது போன்ற கோணத்திலும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது.

மேலும் அந்த பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாகவும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அந்த மாணவி கைப்பட கடைசியாக எழுதி வைத்துவிட்டு உயிரிழந்ததாக சொல்லப்பட்ட கடிதம் நிச்சயமாக இந்த விசாரணைக்கு ஒரு மிகப்பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஒரு வேலை அந்த கடிதத்தை அவர் தான் எழுதினாரா? என்பதை பரிசோதிக்க அந்த கடிதம் ஆய்வகத்திற்கும் அனுப்பப்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், அந்த மாணவியின் மரணம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் மற்றும் அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் கைது செய்யப்படுவதற்கு முன்பாக அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி, ரவிக்குமார், உள்ளிட்டோர் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் மாணவி தற்கொலை செய்து கொண்ட நாளிலிருந்து பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் காவல்துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். எதையும் நாங்கள் மறைக்கவில்லை.

மாணவியின் தாயார் எங்களை பார்க்க முயற்சி செய்ததாக தெரிவிக்கிறார். அப்போது நாங்கள் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தோம் எங்கேயும் செல்லவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

நாங்கள் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும்போது ஏன் இவ்வாறு வன்முறை வெடிக்க வேண்டும்? பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும்? மாணவர்கள் சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை எரித்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.

மாணவர்களின் வாழ்க்கை வீணடிக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மாணவியின் தாயார் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆனால் இது அவர்கள் தரப்பு விளக்கம் தானே ஒழிய இதில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினால் அவர்களுடைய விசாரணையின் கோணம் எப்படி இருக்கும் என்பதை நாம் தெரிவித்து விட இயலாது.

அவர்களுடைய விசாரணையின் கோணம் வேறு மாதிரியாக கூட இருக்கலாம், ஏனென்றால் துரிதமான நாட்களில் இந்த வழக்கின் விசாரணையை முடித்து முழுமையான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.

ஆகவே இதில் சிபிசிஐடி காவல்துறையினர் அவசரப்பட்டாலும் நிச்சயமாக உண்மையான நிலவரம் என்ன என்பது மிக விரைவில் தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.