கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! மேலும் 2 ஆசிரியர்கள் அதிரடி கைது!

0
122

கள்ளக்குறிச்சியில் கனியாமூர் என்ற கிராமத்தில் இயங்கி வருகின்ற தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசவலூர் கிராமத்தைச் சார்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார் இந்த சூழ்நிலையில், அந்த மாணவி சென்ற 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அந்த மாணவியின் அறையில் அந்த மாணவி கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை கைப்பற்றிய காவல் துறையினர் அந்த கடிதத்தில், இங்கே ஆசிரியர்கள் தன்னை மிகவும் துன்புறுத்துவதாகவும், இனிமேல் வரும் காலங்களில் எந்த மாணவ,மாணவிகளையும் இப்படி துன்புறுத்த வேண்டாம் எனவும், கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கிறார்கள். அதேபோல தான் இந்த வருடம் படிப்பிற்காக கட்டிய பள்ளி கட்டணத்தையும் தன்னுடைய தாய் தந்தையிடம் திருப்பி செலுத்துமாறு அந்த கடிதத்தில் மாணவி ஸ்ரீமதி குறிப்பிட்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த மாணவியின் தாயார் தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி அடங்கி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது மாணவி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் எந்த ஒரு ரத்த கரையுமில்லை, அதே போல காவல்துறையினர் வந்து பார்த்து அந்த மாணவி விழுந்து கிடந்த இடத்தில் மார்க் செய்திருப்பார்கள்.

அப்படி எந்த ஒரு அடையாளமும் அங்கே இல்லை, நான் என்னுடைய மகளின் அறைக்கு சென்று பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன், ஆனால் பள்ளி ஆசிரியர்களும், தாளாரும், அனுமதி வழங்கவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும், உறவினர்களும், போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு முன்னதாகவே அந்த பள்ளியில் 4 மாணவ மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது

இதனை தொடர்ந்து தற்போது ஐந்தாவதாக மாணவி ஸ்ரீமதியும் மரணமடைந்ததால் கொதித்தெழுந்த அந்தப் பகுதி இளைஞர்களும், ஸ்ரீமதியின் உறவினர்களும், போராட்டம் நடத்தி வந்தனர். நேற்றைய தின போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.

காவல்துறையினரை நோக்கி கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு காவல்துறையினர் சார்பில் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

மேலும் பள்ளிப் பேருந்துகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இந்த கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கத்தில் கள்ளக்குறிச்சி தாலுக்கா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

அதோடு வன்முறை நடைபெற்ற இடத்தை உள்துறை செயலாளர் பணீந்த்ர ரெட்டி மற்றும் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அந்த சமயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த டிஜிபி சைலேந்திரபாபு இந்த வடக்கு சிவி சிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என தெரிவித்தார். அதோடு மாணவியின் மரணம் குறித்து அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அந்த பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையில், அந்த மாணவியின் மரணம் குறித்து இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கிருத்திகா, உள்ளிட்டோரும் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழக முழுவதும் தனியார் பள்ளிகளில் ஆங்காங்கே இது போன்ற தற்கொலைகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த போராட்டத்தின் விளைவாக இனிவரும் காலங்களில் ஆவது தனியார் பள்ளிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.