7 நாட்களில் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் தொடங்கி வைத்தார்.
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளானது வரும் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் அலுவலகத்தில் ” நம்மவரின் ஐயமிட்டு உண்” என்ற பெயரில், இன்று(நவம்பர்-1) தொடங்கி நவம்பர் 7-ம் தேதி வரையில் சுமார் 7 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை, நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் 7,000 பேருக்கான உணவை வழங்கும் 9 வாகனங்களை முதல்கட்டமாக கமல்ஹாசன் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது, “உலக பட்டினியில் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியா பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை எனது பிறந்தநாளுக்கென்று செய்யவில்லை. அரசியல் குறியீடு என்றே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்” என தெரிவித்தார்.
மேலும், “அரசு செய்ய வேண்டியதை, இன்று மக்கள் நீதி மய்யம் நினைவு படுத்துகிறது, மருந்துக்கு நிகராக உணவு உள்ளது, பல நபர்கள் உணவு கிடைக்காமல் உள்ளனர், நம் நாட்டில் உள்ள ஏழைகளை நிரந்தரமாக பிடித்துக் கொண்டிருக்கின்ற நோய் பசி, இன்று நாம் கொடி அசைத்து துவங்கி வைப்பது அன்னக்கொடி” என்றும் அவர் கூறினார்.
இதன் மூலம் இன்று முதல் நவம்பர் 7-ம் தேதி வரையில், தமிழ்நாடு முழுவதும், “ஆண்டவரின் ஐயமிட்டு உண்” என்ற பெயரில் இந்த அன்னதானம் நடைபெறுகிறது.