Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கவிஞர் பிறைசூடனின் மறைவுக்கு..உலகநாயகன் கமலஹாசன் அஞ்சலி.!!

கவிஞரும் பாடலாசிரியருமான பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சார்ந்தவர் பிறைசூடன். தற்போது அவருக்கு வயது 65. திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று மாலை 4.15 மணி அளவில் தனது குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

இவரது மரணம் தமிழ் திரையுலகினருக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவர் இதுவரை 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1400 பாடல்களை எழுதியுள்ளார்.1985ஆம் ஆண்டு வெளியான சிறை திரைப்படத்தில் ‘ராசாத்தி ரோசா பூவே’ என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு நிறைய ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். சோலப் பசுங்கிளியே, மீனம்மா மீனம்மா, ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல்களையும் எழுதியுள்ளார்.

மேலும், இவர் சில திரைப்படங்களுக்கு வசனங்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சதுரங்க வேட்டை, புகழ் ஆகிய திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கவிஞரும் பாடலாசிரியருமான பிறைசூடனின் மறைவிற்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “தன் புலமையை மறைத்துக்கொண்டு கொடுக்கப்படும் சூழல்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும், ஏற்றபடி எழுதும் பாவலர் பிறைசூடன். இப்போது தன் பாட்டை விரும்பி கேட்பவர்களிடமிருந்து தன்னையே மறைத்துக் கொண்டுள்ளார். அவர் பாடல்கள் மறையா. அஞ்சலிகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Exit mobile version