உத்திரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் எனும் பகுதியை சேர்ந்த 19 வயதான ஒரு பெண்ணை அதே பகுதியை சேர்ந்த 4 நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் சென்றுள்ளனர்.
அப்போது அங்கே இருந்த போலீசார் ராகுல் காந்தி அவர்களை தடியால் தாக்கி கீழே தள்ளி விட்டனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்து மகளிர் அணி செயலாளருமான, திமுக கட்சி எம்பியுமான கனிமொழி உள்பட அனைத்து மகளிர் அணியினரும் ஆளுநர் மாளிகையை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக புறப்பட்டனர்.
பேரணியின் துவக்கத்தில், “போலீசார் ராகுல் காந்தியை கீழே தள்ளவில்லை இந்திய ஜனநாயகத்தை கீழே தள்ளி விட்டனர்” என்று ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அப்போது பேரணியாக சென்ற அனைவரையும் கனிமொழி உள்பட அந்த கட்சியினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்த கைது நடவடிக்கை உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த கொடூரத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என்றும் இந்த தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிதான் நடக்கிறதா என்றும் அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.