காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.1979 ஆம் ஆண்டு நடைபெற்ற அத்திவரதர் தரிசன விழா 40 கழித்து இந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 16-ந் தேதி வரை சிறப்பாக நடைபெற்றது.
அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
48 நாட்கள் நடைபெற்ற விழாவில் அத்திவரதர் 24 நாட்கள் படுத்த கோலத்திலும் , மீதி நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளித்தார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். விழா நடைபெற்ற ஜூலை, ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 3.59 கோடி பக்தர்கள் காஞ்சிபுரம் நகருக்கு வந்தனர் என தகவல் வந்துள்ளது.
ஆகஸ்டு 16-ந் தேதி தரிசனம் முடிந்ததும் அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து காஞ்சிபுரம் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்தபடி உள்ளது.
அத்திவரதரை தரிசிக்க முடியாதவர்கள் அவர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் குளத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.
இதன் காரணமாக வழக்கத்தை விட காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை உயர்ந்து காண படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் தற்போது காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்து உள்ளது.
இதற்கு அத்திவரதர் தரிசனமே காரணம் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு வரை காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 5.82 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு 4.19 கோடி பேர் வருகை தந்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்திவரதர் தரிசனம் மவுசால் சுற்றுலா இடத்தில் சென்னையை பின்னுக்கு தள்ளி காஞ்சிபுரம் முதல் இடத்தை பிடித்துள்ளது, சென்னை 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. சென்னைக்கு 2.75 கோடி சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.