குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 கன்னி
மகரத்தில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்றுள்ள குரு பகவான் 21 – 6 – 2021 அன்று வக்கிரம் ஆகி, 18 – 10 2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
அதேபோல் கடந்த 23-5-2021 அன்று மகரத்தில் வக்ரம் ஆன சனி பகவான், 11-10-2021 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார்.
எனவே, குரு மற்றும் சனி ஆகிய இரு கிரகங்களின் வக்ர கதியை கணக்கில் கொண்டே, ஒவ்வொரு ராசிக்கும் பலன்களை அறிய வேண்டும்.
அந்த வகையில், கன்னி ராசிக்கு ஆறாம் இடமான கும்பத்திற்கு அதிசாரமாக சென்றுள்ள குரு தற்போது வக்கிரம் அடைந்துள்ளார்.
பொதுவாக குரு பகவான் ஆறாம் இடத்தில் இருப்பது நன்மையை தராது. அதனால், வேலை மற்றும் தொழில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தால், குருவின் வக்கிர காலம் அதை மாற்றி அமைக்கும்.
வருவாய் குறைந்து கடன் வாங்கியவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், எதிரிகளால் வாய்ப்புகளை இழந்தவர்கள் அனைவருக்கும், வக்கிர குரு, தற்போது நல்ல பலன்களை தர தொடங்குவார். அதனால், பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
இதுவரை தொல்லை தந்தவர்கள், இனி அடங்கி விடுவார்கள். வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். கடன்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
குருவின் ஐந்தாம் பார்வை, ராசியின் பத்தாம் இடத்தின் மீது விழுவதால், வேலை மற்றும் தொழிலில் இருந்த தடைகள் அகலும். தொழில் முடக்கம் நீங்கும். புதிய வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் அமையும்.
தடைபட்ட புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். பழுதுபட்ட எந்திரங்கள் புதுப்பிக்கப்படும். சிலர் புதிய எந்திரங்களை வாங்குவார்கள்.
குருவின் ஏழாம் பார்வை ராசிக்கு பனிரண்டாம் இடத்தில் விழுவதால், தடைபட்ட வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மீண்டும் தொடங்கும்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள் வீடு திரும்புவார்கள். தடைபட்ட ருசியான உணவுகள், நல்ல உறக்கம் மீண்டும் கிடைக்கும்.
குருவின் ஒன்பதாம் பார்வை, ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு கிடைப்பதால், இதுவரை வருமானம் இன்றி இருந்தவர்களுக்கு இனி வருவாய் வர தொடங்கும்.
நீண்டநாளாக வீட்டுக்கு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த பொருட்களை, வாங்குவதற்கான சூழ்நிலை அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். சிலருக்கு புதிய நகைகளும் சேரும்.
வக்கிர குருவை போல, வக்கிர சனியின் பலன்களை அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
அதன்படி, கன்னி ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்த சனி, தற்போது வக்கிரம் அடைவதால், மனதுக்கு பிடிக்காத செயல்கள் நிகழாத வண்ணம் தடுத்து நிறுத்துவார்.
தடைபட்ட காதல் மீண்டும் துளிர்க்கும். தடைபட்ட திருமணங்கள் இனி தடையின்றி நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.
இதுவரை நடந்த விருப்பம் இல்லாத நிகழ்வுகள் அனைத்தையும், வக்கிர சனி மாற்றி அமைப்பார்.
சனியின் மூன்றாம் பார்வை ராசிக்கு ஏழாம் இடத்தில் விழுவதால், தள்ளிப்போன திருமணங்கள் விரைவில் நடக்கும். பிரிந்து போன நண்பர்கள் மீண்டும் சேருவார்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு மாறும். தொழில் பங்கு தாரர்கள் இணக்கமாக மாறுவார்கள்.
பொது வாழ்க்கையில் மன நிம்மதி இழந்தவர்கள், மீண்டும் பழைய நிலையை அடைவார்கள், சிலருக்கு அரசியல் பொறுப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் அமையும். அந்த பயணங்கள் தொழில் நிமித்தமாகவும் இருக்கலாம்.
சனியின் ஏழாம் பார்வை ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் விழுவதால், தொழில் ரீதியாக தடைபட்ட லாபங்கள் மீண்டும் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் தன லாபம் கிடைக்கும். அவர்களின் உதவியும் கிடைக்கும்.
சனியின் பத்தாம் பார்வை ராசிக்கு இரண்டாம் இடத்தில் விழுவதால், இதுவரை குடும்பத்தில் இருந்த இணக்கமற்ற சூழல் மாறி மகிழ்ச்சியை தரும். அடகு வைத்த பொருட்கள் மீண்டும் வீடு திரும்பும். சிலர் புதிய பொருட்கள் மற்றும் நகைகளை வாங்குவார்கள்.
ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருக்கும் ராகு, மன நிறைவை தர மாட்டார். ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். விரும்பிய இடத்துக்கு சென்று வர முடியாத நிலையும் தொடரும். சிலர் மனதில் தேவை இல்லாத விஷயத்தை நினைத்து குழம்பிக்கொண்டே இருப்பார்கள்.
ஆனாலும், மூன்றாம் இடத்தில் இருக்கும் கேது, மன தைரியத்தை தருவார். பின்னால் நடக்க கூடிய நிகழ்வுகள், ஏதாவது ஒரு வகையில் முன்கூட்டியே மனதுக்கு தெரிய வரும்.
இதுவரை, கோச்சார குரு மற்றும் சனியால் பாதிப்புகளை சந்தித்து இருந்தால், அது வக்கிர குரு மற்றும் வக்கிர சனியால், முடிவுக்கு வரும். அதனால், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
பொதுவாக, ஒருவரது ஜென்ம ஜாதகத்தில் வக்கிரமாக இருக்கும் கிரகம், கோச்சாரத்தில் வக்ரம் ஆகும்போது, அந்த ஜாதகருக்கு, நல்ல பலன்களை தரும் என்பது ஜோதிட விதியாகும்.
ஜென்ம ஜாதகத்தில் வக்கிரம் அடையாத கிரகங்கள், கோச்சாரத்தில் வக்கிரம் அடையும்போது, பெரிய அளவில், நல்ல பலன்களை தருவதில்லை.
எனவே, வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் பலன்கள் அவரவர் தனிப்பட்ட ஜாதகத்தை பொறுத்து மாறுபடும்.
மற்ற ராசிகள்:
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மேஷம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 ரிஷபம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மிதுனம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கடகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 சிம்மம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 துலாம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 விருச்சிகம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 தனுசு
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 மகரம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள்– 2021 கும்பம்
குரு + சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் – 2021 மீனம்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வக்கிர குரு மற்றும் வக்கிர சனியின் முழு பலன்களை காண கீழுள்ள வீடியோ பதிவை கிளிக் செய்து பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=ZdJlicZmZn4