வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் கணிசமான சீட் கிடைக்கும் என காத்திருந்த கருணாஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாஜக, பாமக, தேமுதிகவிற்கு நேரம் ஒதுக்கிய அளவிற்கு கூட சிறிய கட்சிகளை இபிஎஸ் – ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் கடுப்பான கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தான் சசிகலா ஆதரவாளன் என்பதால் எடப்பாடி பழனிசாமி தன்னை ஒதுக்குவதாகவும், வன்னியர், கவுண்டர்கள் சமூகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அவர் பாடுபடுவதாகவும் பகீர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
முக்குலத்தோர் இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை கிடப்பில் போட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எங்கள் சமூகத்தினர் பாடம் புகாட்டுவார்கள் என நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தார். அதன் பின்னர் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் அளித்தார். ஆனால் திமுக தரப்பிலிருந்து அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு சீட்டாவது கிடைக்கும் என காத்திருந்தவரை திமுக தலைமை கண்டுகொள்ளவில்லை. இதனால் திமுகவுக்கு அளித்த ஆதரவையும் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முக்குலத்தோர் புலிப்படை புறக்கணிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க களநிலவரத்திற்கு ஏற்றது போல் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இழந்த முக்குலத்தோர் மரியாதையை திரும்ப பெற அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என அறைக்கூவல் விடுத்துள்ளார்.