கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் போன்ற 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.அதன்படி தற்சமயம் தமிழ்நாடு, புதுவை, கேரளா, ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுற்று இருக்கின்ற நிலையில், அசாம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றன.அதில் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வந்தாலும் கூட அங்கே பல சமயங்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி வருகின்றது.
இந்த நிலையில், கேரள மாநிலத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்த அப்துல்வகாப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராகேஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வயலார் ரவி உள்ளிட்டோரின் பதவிக்காலம் வருகிற 21ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த மூன்று தொகுதிகளுக்கும் இந்த மாதம் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்றையதினம் அறிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கேரளா மாநிலத்தில் தற்சமயம் காலியாக இருக்கின்ற தொகுதிகளுக்கு கடந்த 12ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்தது. ஆனாலும் இந்த தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் திடீரென்று ரத்து செய்து வைத்தது. குறிப்பிட்ட அந்த மூன்று இடங்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கேரள மாநில நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.