கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்து – தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்
கேரளா ஆரியங்காவு பகுதியில் கேரளா அரசு பேருந்தும் சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளாதில் தமிழகத்தை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம்.
தென்காசி மாவட்டம், தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரளா அரசு பேருந்து ஒன்று திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது, தமிழக-கேரளா எல்லைப் பகுதியான ஆரியங்காவு பகுதியில் பேருந்தானது சென்று கொண்டிருக்கும் போது, அந்த சாலையில் எதிரே வந்த சொகுசு கார் ஒன்று கேரளா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், கார் முழுவதுமாக சேதம் அடைந்து அப்பாளம் போல் நொறுங்கி காட்சியளித்தது. மேலும் காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தென்மலை காவல் துறையினர் பஸ்ஸின் அடியில் மாட்டிக் கொண்ட காரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புனலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதில் ஒருவர் மட்டும் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில், அவரை மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தென்மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், முதற்கட்ட விசாரணையில் காயம் அடைந்த 5 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
மேலும், அவர்கள் ஏன் அங்கு சென்றார்கள்? எப்படி விபத்து ஏற்பட்டது? அவர்களது பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவத்தால் திருமங்கலம் -கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.