அதிர்ஷ்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வியாபாரம்தான் லாட்டரி டிக்கெட். அதேநேரம், சிகரெட், மது போல லாட்டரி சீட் வாங்குவதிலேயே நிறைய சாமானியர்கள் தங்களின் வருமானத்தை இழந்ததும் தமிழ்நாட்டில் நடந்தது. குறிப்பாக தினக்கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் லாட்டரி சீட் வாங்கும் பழக்கம் இருந்தது. அதுவும், உடனே ரிசல்ட் தெரிந்துவிடும் சுரண்டி பார்க்கும் லாட்டரியும் தமிழகத்தில் பல வருடங்களுக்கு முன்பு பழக்கத்தில் இருந்தது.
தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யும் கடைகள் இருந்தது. மேலும், இது தொடர்பான ஏஜெண்டுகள். கடையிலிருந்து லாட்டரியை வாங்கி மக்களிடம் சென்று விற்கும் நபர்களும் இருந்தார்கள். பலரின் வாழ்வாதாரமாகவும் லாட்டரி விற்பனை செய்யும் தொழில் தமிழகத்தில் இருந்தது. ஆனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா லாட்டரி விற்பனைக்கு தடை கொண்டுவந்தார். அதன்பின் தமிழகத்தில் லாட்டரி சீட் விற்பனையே இல்லை.
ஆனால், சட்டத்திற்கு புறம்பாக வேறு வழிகளில் லாட்டரி தொழில் சில ஊர்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது இது தொடர்பாக சிலர் கைது செய்யப்படுவதும் உண்டு. ஆனால், கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்துகிறது. அங்கு லாட்டரி வியாபாரம் ஒரு முக்கிய தொழிலாக பார்க்கப்படுகிறது.
திங்கள் கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் குலுக்கல் நடைபெறுகிறது. அதேபோல், வருடத்தில் 4 அல்லது 5 பம்பர் குலுக்களையும் நடத்தி ஒரு டிக்கெட் 200 லிருந்து 500 வரை விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசரி கூட்டணி அரசு 2வது முறையாக பொறுப்பேற்றது முதல் இப்போது வரை சுமார் 41 ஆயிரம் கோடிக்கு லாட்டரி விற்பனை செய்யப்பட்டிருப்பதாக RTI தகவல் தெரிவித்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் 2024 டிசம்பர் வர 41,138 கோடிக்கு லாட்டரி விற்பனை நடந்திருக்கிறது. இதன் மூலம் கேரள அரசுக்கு 11.518.68 கோடி அரசுக்கு வரியாக கிடைத்திருக்கிறதாம். மேலும், 2781.54 கோடி லாபமும் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.