காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?

0
91

மறைந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த் & கோ வசந்தகுமார் புகைப்பட திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கப்படாதது குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார். 

 

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அன் கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

 

அவர் தமிழக காங்கிரஸின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் வசந்த குமாருக்கு புகைப்படம் திறப்பு விழா நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் எம்பி, தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன்,

 

பலராமன், பீட்டர் அல்போன்ஸ், உள்ளிட்ட பல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புகைப்படம் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியானது.

 

அந்தப் புகைப்படத்தினை குறிப்பிட்டு காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,

 

“உயர்வான செயல். ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவில் யாருக்குமே இது பற்றிய தகவல் சொல்லப்படவில்லை. தமிழகத்தில் இருக்கும் ஒரே தேசிய செய்தித் தொடர்பாளர் நான்தான்.

 

ஆனால் நான் இந்தத் தகவலைச் செய்தித்தாள்கள் மூலமாகத் தெரிந்து கொள்கிறேன். நாம் நம் வலிமையை அதிகரிக்க வேண்டும். நமது பாதுகாப்பற்ற மனநிலை, அகந்தை (ஈகோ) காரணமாக பலவீனமாக்கக் கூடாது. எப்போது அதைச் செய்வோம்?” என அவர் விமர்சனத்துடன் தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே, தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆதரவு தெரிவித்து குஷ்பு வெளியிட்ட கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து குஷ்பு பாஜகவில் சேரப் போகிறார் என்ற பேச்சுகளும் அடிபட்டன. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது குஷ்பு வெளியிட்டுள்ள இந்த விமர்சனம் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பினை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.