நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

0
127
நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகள் 279 பேர் விடுவிப்பு

நைஜீரியா நாட்டில் போகோ ஹராம் பயங்கரவாத இயத்தினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவர்கள் அந்நாட்டு போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். இவர்களின் தாக்குதலுக்கு இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இவர்கள் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளை கடத்திச்சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இதனிடையே, நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளிக்குள் பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் உள்ளே நுழைந்தனர். அங்குள்ள மாணவிகளை முனையில் சிறைபிடித்து லாரிகளில் கடத்திச்சென்றனர்.

இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் முகமது புகாரி, கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளை பத்திரமாக மீட்பதற்கு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.‌ அதன்படி மாணவிகளை கடத்தி சென்ற பயங்கரவாதிகளுடன் மாகாண அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுதலை செய்வதாக பயங்கரவாதிகள் ஒப்புக்கொண்டனர்.

அதன்படி கடத்தப்பட்ட 279 மாணவிகளும் நேற்று விடுவிக்கப்பட்டதாக ஜம்பாரா மாகாண கவர்னர் பெல்லோ மாதவல்லே அறிவித்தார்.