முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்ததிலிருந்து இன்று வரையில் அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அவர் உயிருடன் இருந்த வரையில் அதிமுகவை ஒரு ராணுவ கட்டுப்பாட்டுடன் வழி நடத்தினார் என்று நான் சொல்லவேண்டும். ஆனால் அவர் உயிரிழந்த அந்த நொடியிலிருந்து அதிமுக அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தது.
பல பிரச்சினைகளை சந்தித்தாலும் கூட பின்பு மெல்ல, மெல்ல. அதிலிருந்து மீண்டு தற்போது ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறது அந்த கட்சி.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அந்த கட்சியை எப்படியாவது தன் வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று சசிகலா தீவிர முயற்சியை தற்போது வரையும் மேற்கொண்டு வருகிறார்.
அவர் கட்சியில் தனக்கு செல்வாக்கு இருக்கிறது கட்சியின் தொண்டர்கள் தன் பக்கமிருக்கிறார்கள் என்பதை காட்டிக் கொள்வதற்காக பல்வேறு உத்திகளைக் கையாண்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழியான சசிகலா அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி கொடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண தாபா படுகாயமடைந்தார். அந்த பங்களாவில் இருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
மேலும் அங்கிருந்து பல முக்கிய ஆவணங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அதோடு கொலை நடந்த அந்த சமயத்தில் அந்த பங்களாவில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல் துறையைச் சார்ந்தவர்கள் அனைவரும் திரும்பப் பெறப்பட்டிருந்தார்கள் என்பதும், கொலை நடந்த சமயத்தில் அந்த பங்களாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்பதும் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.
அதோடு ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சில வருடங்களுக்கு முன்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் பலியானார் இது மேலும் சந்தேகத்தை கிளப்பியது.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து தனிப்படை அமைத்து அந்த தனிப்படை காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்து வந்தனர். இதுகுறித்து கேரளாவைச் சேர்ந்த மனோஜ் உட்பட 10 பேரை கோத்தகிரி காவல்துறையினர் கைது செய்தார்கள்.
அதோடு இந்த வழக்கில் காவல்துறையினர் தேடி வந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கடந்த 2017ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி சேலத்தில் நடந்த விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த கொடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்த கொலை, கொள்ளை குறித்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோயம்புத்தூர் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அதோடு இந்த தனிப்படை காவல்துறையினர் அந்த எஸ்டேட்டின் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை நடத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், கடந்த 15ஆம் தேதி அதிமுக சட்டசபை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டியிடம் கோயமுத்தூர் காவல்துறையினர் பயிற்சி பள்ளியில் வைத்து 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
மறுநாள் அவருடைய மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி. ஆறுகுட்டியின் உதவியாளர் நாராயணன் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ரவியிடம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் கார் ஓட்டுனர் கனகராஜ் பேசியதாக தெரிந்திருக்கிறது.
ஆகவே அவரிடம் கடந்த 18ஆம் தேதி 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் விசாரணை நடத்த தனிப்படை காவல்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் சசிகலாவிடம் சென்னையிலுள்ள அவருடைய வீட்டில் வைத்து இன்று மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் சசிகலா கொடநாடு வழக்கு குறித்து தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவிப்பார் என்று கருதுவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
சசிகலாவிடம் விசாரணை நடத்துவதற்காக சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார்கள். ஆகவே இந்த வழக்கில் அவரிடம் நடத்தப்படும் விசாரணை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்பட்டு வருகிறது.