கலைமகளுக்கு தமிழகத்தில் உள்ள ஒரே கோவில்!

0
162

படைப்பின் கடவுளான பிரம்மாவின் சக்தியாக வணங்கப்படுபவர் சரஸ்வதி. ரிக் வேதத்தின் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டிருக்கிறார். வளமையை தருவதாகவும், படைப்புக்கு ஊக்கமாக இருப்பதாகவும், எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துவதாகவும், நீரை குறிப்பிடுகிறார்கள்.

நீராக ஒரு வகிக்கப்படும் சரஸ்வதி தேவி படைப்பின் சக்தி ஆவார். பேச்சுக்கலை எழுத்துக்களை என்று கலைகளுக்கெல்லாம் கடவுளாக சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறார்.

அறிவு என்பது ஒளி. அறியாமை என்பது இருள். சரஸ்வதி தேவிக்கு பிடித்த வெண்மை நிறம், இருளை அகற்றும் வல்லமை கொண்டது. அவ்வாறே அறியாமை இருளை அறிவு ஆற்றலால் அகற்றி சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறார்.

வெள்ளை ஆடை அணிந்து வெள்ளை தாமரை பூவில் வீற்றிருக்கிறார் சரஸ்வதி தேவி. இவருக்கு என்று தனி ஆலயங்களை காண்பது மிகவும் அரிதான ஒன்று.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே இருக்கின்ற பூந்தோட்டம் என்ற கிராமத்துக்கு அருகே கூத்தனூரில் சரஸ்வதி தேவிக்கு என்று தனி கோவில் உள்ளது. முன்புறம் 3 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமான தோற்றமும் வழங்கும் இந்த கோவில் முன் மண்டபம் கலை வேலைபாடுகளுடன் காட்சி தருகிறது.

மூலவராக சரஸ்வதி தேவி அருள் பாலிக்கிறார். பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின் முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல் கையில் அட்சர மாலையும், இடது மேல் கையில் அமிர்த கலசமும் தாங்கி வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியை தரிசிக்க கண் கோடி வேண்டும் என்று தெரிவிக்கிறார்கள்.

அறிவு அருள் மலரும் அவருடைய கோலத்தை தரிசிக்க தரணி முழுவதிலும் இருந்தும் மக்கள் கூத்தனூரில் திரளுகிறார்கள். இங்குள்ள ருத்ர கங்கை எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சங்கமித்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.

இந்த ஊரை இரண்டாம் ராஜராஜ சோழன் தன்னுடைய அவை புலவரான ஒட்டக்கூத்தரக்கு தானமாக வழங்கியதாகவும், அதனால் இந்த ஊர் கூத்தனூர் என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கூத்தனூர் சரஸ்வதி தேவியை மகாகவி பாரதியாரும் தரிசனம் செய்துள்ளார்.

கோவில் பிரகாரத்தில் விநாயகர், நாகர், பிரம்மா, பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பாலதண்டாயுதபாணியும் அருள் பாலிக்கிறார்கள். சரஸ்வதிக்கு முன்பு இருக்கின்ற அன்ன வாகனத்தில் நர்த்தன விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது சிறப்பம்சம் என்று சொல்லப்படுகிறது.

பள்ளியில் சேர்க்கும் முன்பாக பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இந்த கோவிலுக்கு அழைத்து வந்து நெல்மணியில் எழுத பழகி கொடுக்கிறார்கள் இதற்காக பால வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவிலில் விஜயதசமி நாளில் நடைபெறுகிறது.

கல்வி வரம் தருபவராக சரஸ்வதி அம்மன் இங்கு அருள்பாலிப்பதால் பள்ளி மாணவர்கள் தேர்வு நாளில் அம்மனை தரிசிக்க தவறுவதே இல்லை. தமிழகத்தின் சரஸ்வதிக்கு என்று இருக்கின்ற ஒரே கோவில் கூத்தனூர் கோவில் தான் சரஸ்வதிக்கு வேறு எங்கும் தனியாக கோவில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.