பெண்களுக்கு ஏற்படக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மார்பக புற்றுநோய்.பெண்களுக்கு இடையே இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை என்பதால் நோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகே மருத்துவரை நாடுகின்றனர்.கடந்த சில வருடங்களாக இது உயிர்க்கொல்லி நோயாக மாறிவருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
உலகில் மார்பக புற்றுநோய் பாதிப்பில் அமெரிக்கா,சீனாவை அடுத்து இந்தியா இருப்பது கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.முன்பெல்லாம் 50 வயதை கடந்த பெண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்தது.ஆனால் இன்று 30 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்களுக்கே மார்பக புற்றுநோய் எளிதில் வந்துவிடுகிறது.
முதலில் மார்பகத்தில் வலியற்ற கட்டிகள் தோன்றி பிறகு அவை வளர்ச்சியடைந்து விடுகிறது.அதன் பிறகு அவை பெரிய கட்டிகளாக மாறி அதிக வலியை ஏற்படுத்துகிறது.பெரும்பாலான பெண்கள் புற்றுநோய் முற்றிய பிறகே அதற்கான சிகிச்சை பெறுகின்றனர்.இதனால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
எனவே மார்பக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? எப்படி சுய பரிசோதனை செய்வது என்பது குறித்து பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மார்பக பகுதியில் கட்டி அல்லது வீக்கம் ஏற்பட்டிருக்கிறதா என்று கவனிக்கவும்.எப்பொழுதும் போல் அல்லாமல் மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உரிய மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
மார்பகங்களில் வீக்கம்,சிவந்து போதல்,தடிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் அதை அடிக்கடி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த பாதிப்பு நீடித்தால் மார்பக புற்றுநோய் உள்ளது என்று அர்த்தம்.
முலைக்காம்பு பகுதியில் சிவத்தல்,முலைக்காம்பு உள் இழுத்தபடி இருத்தல்,முலைக்காம்பின் அளவில் திடீர் மாற்றம் போன்றவை மார்பக புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும்.