சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு

0
186

சிட்டிசன் பாணியில் காணாமல் போன ஏரி! மீட்டெடுக்கும் முயற்சியில் தனியார் அமைப்பு

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்படத்தில் கடலோர பகுதியில் இருந்த ஒரு ஊரே காணாமல் போனதை காட்டியிருப்பார்கள்.அந்த வகையில் தற்போது ஒரு ஏரியே காணாமல் போன சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நன்னை என்ற கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களிடம் புழக்கத்தில் இருந்த ஏரி தற்போது காணாமல் போயுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து இறகுகள் என்ற தனியார் அமைப்பு அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு வைத்த கோரிக்கையில் கூறியுள்ளதாவது.

அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நன்னை கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் மக்களின் புழக்கத்தில் இருந்த ஏரி தற்போது காணாமல் போயிருக்கிறது. அரசு பதிவேடுகளில் கூட ஏரி மறைக்கப்பட்டு தனிநபர் சொத்துகளாக மாற்றப்பட்டு கை மாறி இருக்கிறது.

இதே கிராமத்தைச் சேர்ந்த திருமதி நல்லம்மாள் என்பவர் இந்த ஏரியை மீட்க கடந்த 21 ஆண்டுகளாக போராடி வருகிறார். இவர் குறித்த செய்திகள் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகங்களில் வந்தாலும் அரசு செவி சாய்க்கவில்லை. எந்த அதிகாரிகளை போய் முறையிட்டாலும் இன்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் இவரது போராட்டம் கண்டுகொள்ளப்படவில்லை.

ஏரி குளம் மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. இன்றுள்ள ஆவணங்களை தவிர்த்து 40 ஆண்டுகளுக்கு முன்னருள்ள ஆவணங்களின் அடிப்படையில் காணாமல் போன ஏரியை மீட்டு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.