அதிமுகவின் முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்

0
136
Lakshmanan

அதிமுகவின் முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவருமான லட்சுமணன் இன்று திமுகவில் இணைந்தார்.

கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன.

இதில் முதன்மையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக திமுகவில் அதிருப்தியில் இருந்த வி.பி துரைசாமி,தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான கு.க. செல்வம் உள்ளிட்டோரை தங்கள் வசம் இழுத்தது. குறிப்பாக சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் கு.க. செல்வம் பாஜகவின் பக்கம் சென்றது திமுகவிற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் திமுகவும் தங்கள் பங்குக்கு மாற்றுகட்சியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் பாஜகவிலிருந்து எஸ்.கே.வேதரத்தினம் திமுகவில் இணைந்துள்ளார்.இவர் இதற்கு முன் திமுகவில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சரான டாக்டர் விஜய் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவில் இணையவுள்ளார் என்ற தகவல் பரவலாக பேசப்பட்டது.

இது குறித்த செய்தியை படிக்க: கோஷ்டி அரசியலால் திமுக பக்கம் நகரும் அதிமுகவின் முக்கிய பிரபலம்! குழப்பத்தில் அதிமுக தலைமை

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்பியும்,மாவட்ட செயலாளருமான லட்சமணன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது அதிமுக தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைதேர்தலின் போதே சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் லட்சமணன் இடையே கோஷ்டி பூசல் இருந்துள்ளது.

இதனை உணர்ந்த மேலிடம் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் பலனளிக்காத காரணத்தால் தற்போது லட்சுமணன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக லட்சமணன் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.