லஷ்மி விலாஸ் வங்கியின் தற்போதைய நிலை – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0
153

லஷ்மி விலாஸ் வங்கி, கரூர் மாவட்டத்திலுள்ள அலுவலகத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்குகிறது. இந்த வங்கி 1926 ஆம் ஆண்டு இராமலிங்க செட்டியார் என்பவரின் தலைமையில் 7 வர்த்தகர்களுடன் இணைந்து தொடங்கியது ஆகும்.

இந்த வங்கி படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் கண்டது. தமிழகத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. அதாவது, 94 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது தான் லஷ்மி விலாஸ் வங்கி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் 2016 ஆம் ஆண்டு முதல், இந்த வங்கி தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து  வருகிறது. அதிக தொகைக்கு கடன் கொடுப்பதில் கவனம் செலுத்தி வந்ததால் இந்த வங்கி இவ்வாறான நஷ்டத்தை சந்தித்துள்ளது எனலாம்.

முக்கியமாக மால்விந்தர்சிங், ஷிவிந்தர்சிங் என்கின்ற சகோதரர்களின் ரெலிகர் நிறுவனத்திற்கு, 720 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது லஷ்மி விலாஸ் வங்கி. இந்த கடன் வாராக் கடனாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த வங்கிக்கு வாராக்கடன் அதிகரித்துள்ளது. 

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த வங்கி லாபம் ஈட்ட முடியாமல் நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகிறது. லஷ்மி விலாஸ் வங்கிக்கு இதனால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி இந்த நிர்வாகத்தினை கையில் எடுத்துக்கொண்டு,  தற்காலிகமாக பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இவ்வாறான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதால், பல்வேறு காரணத்திற்காக பணம் எடுப்பதற்கு லஷ்மி விலாஸ் வங்கியை அணுகும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரிசர்வ் வங்கி நியமித்துள்ள சிறப்பு அதிகாரி மனோகரன் கூறியதாவது, “வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் பாதுகாப்பாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.