ராம நாமம் எங்கெல்லாம் பாட படுகிறதோ அங்கெல்லாம் அனுமன் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதே போல ஸ்ரீமன் நாராயணன் எனப்படும் மகாவிஷ்ணுவின் பெருமை பேசப்படும் இடங்கள் அனைத்திலும் திருமகளான லட்சுமி தேவி வசிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னும் எங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வார், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கே நாம் காணலாம்.
மகாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்ந்து வருவதால் நெல்லிக்கனிக்கு ஹரி பழம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் இருக்கிறது.
ஒருவருடைய வீட்டில் நெல்லி மரம் இருந்தால் அந்த வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும், அங்கு லட்சுமி வாசம் செய்வார் என சொல்லப்படுகிறது. தீய சக்திகள் அந்த வீட்டை நெருங்காது.
மங்கள பொருட்களாக கருதப்படும் மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், மாவிலைத் தோரணம், சுமங்கலிப்பெண்கள், பூரண கும்பம், திருமண வாழை, வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம், உள்ளிட்டவற்றிலும் லட்சுமி வாசம் செய்கிறார் என்று சொல்லப்படுகிறது.
வீட்டில் துளசி மாடம் வைத்திருப்பவர்கள் அதிகாலையில் நீராடி விட்டு துளசிமாடம் முன்பாக நாள்தோறும் விளக்கு ஏற்றி 3 முறை வலம் வந்து வணங்கினால் லட்சுமியின் அருளை பெறலாம் என சொல்லப்படுகிறது.
வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க வெள்ளை நிற புறாக்களை வளர்க்கலாம், சங்கு நெல்லிக்காய், பசு சாணம், கோமியம், தாமரைப்பூ. ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பதும் லட்சுமி கடாட்சத்தை பெற்றுத்தரும் என சொல்லப்படுகிறது.
காலையில் கண் விழித்து எழுந்தவுடன் உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படத்தை பார்ப்பது செல்வ வளத்தை அதிகரிக்கும். லட்சுமியின் அருளையும் வழங்கும் என்கிறார்கள்.