மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டை பகுதியில், மு.க. அழகிரி கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மதுரை மாவட்ட குற்றப்பிரிவில், 2014ம் ஆண்டு, அழகிரி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள்
இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரிய அழகிரி தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை செய்தது. 2021ல், போலி ஆவணங்கள் தயாரித்தது, மோசடி, ஏமாற்றுதல், போலி ஆவணங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால், நம்பிக்கை மோசடி, கூட்டுச்சதி போன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுபட முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதே நேரத்தில், வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி, அழகிரியும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இரு மனுக்களும் 2023ல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நீண்ட நாட்களாக வாதங்கள் நடைபெற்றன.
உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு
இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் மார்ச் 6ல் வழங்கினார். இதில்,
நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
போலி ஆவணங்கள் தயாரித்தது, மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அழகிரியை விடுவித்த மதுரை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார்.
வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி, அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனால், மு.க. அழகிரி மீதான வழக்கின் விசாரணை தொடரும் என்பதும் உறுதியாகியுள்ளது.