கொரோனாவால் பாதிக்கபட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கவலைக்கிடம்

0
117

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் உடல்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது.

இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகிப்பவருமான ஜெ.அன்பழகன் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவர்.

இந்நிலையில் அவர் கொரோனா பாதிப்பினால் பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு காலத்தில் திமுகவின் சார்பாக நடத்தப்பட்ட ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை செய்வது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் காய்ச்சல் இருப்பதாக கூறி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது முன்னெச்சரிக்கையாக கொரோனா சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் சந்தேகத்தின் அடிப்படையில் தன்னைதானே வீட்டில் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால் அவர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான், அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.