பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

0
143

பச்சை மறைந்து வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் புல்வெளிகள்! காட்டுத்தீ ஏற்படும் அபாயம்!! காரணம் என்ன?

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாத இறுதியில் பனிக்காலம் தொடங்கி, நவம்பர் மாதம் உறைபனி சீசன் நிலவி வருவது வழக்கம். நவம்பர் முதல் மார்ச் மாதம் முதல் வாரம் வரையில் இதன் தாக்கம் இருக்கும் என சொல்லப்படுகிறது. நடப்பு வருடத்தில் நீடித்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாகவும் மற்றும் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாகவும் உறைபனி சீசன் தாமதம் ஆனது. இதனால் டிசம்பர் மத்தியில் பனிப்பொழிவு தொடங்கி அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால் பனியின் தாக்கம் குறைந்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் கடந்த சில நாட்களாக ஊட்டியில் உறைபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம், விளையாட்டு மைதானம் மற்றும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் உறைபனி கொட்டி கிடந்தது.

பச்சை புல்வெளிகள் தெரியாத அளவுக்கு அந்த இடமே வெண்மை நிறத்தில் காட்சி அளித்தது. காந்தல் முக்கோணம் பகுதியில் புல்வெளிகளில் உறைபனி படர்ந்திருந்தது. மேலும் உறைபனி தாக்கம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது.

தொடர் பனியால் தாழ்வான பகுதிகளில் உள்ள புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் உள்ள புல்வெளிகள் கருகி உள்ளன. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளது. திறந்தவெளி மற்றும் சாலைகளில் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் ஆட்டோ போன்ற வாகனங்களும் உறைபனியால் போர்த்தப்பட்டு உள்ளது. அதனை அகற்றினாலும் வாகனங்களை இயக்க சிரமம் ஏற்படுகிறது என்றும், என்ஜின் சூடாக நீண்ட நேரம் ஆகிறது எனவும் அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.