மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை! காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு என்ன?

0
201

மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை! காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவு என்ன?

மேகதாது அருகே கர்நாடக அரசு அணைகட்ட அனுமதி அளிக்கும் வகையில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதா எனவும் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அரசு நிலைப்பாடு என்ன என்றும் விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்துக்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிஸ்வேஷ்வர், மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019 ம் ஆண்டு மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடகா அரசால் சமர்ப்பிக்கப்பட்டது எனவும் ,அந்த விரிவான திட்ட அறிக்கை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேகதாது அணைத்திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தின் பல்வேறு கூட்டங்களில் விவாதப் பொருளாக சேர்க்கப்பட்டது எனவும் ,இருப்பினும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இடம் பெற்றுள்ள மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் மேகதாது அணைக்குறித்து விவாதம் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த ஆண்டு பிப்ரவரி 11 ம் தேதி நடைபெற்ற 15வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை பெறப்பட்டு அவை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேகதாது அணைத் திட்டம் குறித்து ஜூலை 22 ம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் விவாத பொருளாக சேர்க்கப்பட்டது என தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ,இருப்பினும் அந்த கூட்டத்தில் மேகதாது அணை திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை விவாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.