சிறுத்தையின் கொடூர செயல்!! குழந்தையை மீட்க தாயின் போராட்டம் !!
அம்மா என்றாலே வலிமையானவர்கள் தான். தனது பிள்ளைக்கு ஆபத்து ஏற்படுமானால் யார் என்றும் பார்க்காமல் துணிந்து போராடி தனது குழந்தைகளை காப்பாற்றுவார். தாய் தனது குழந்தைகள் மீது வைத்திருக்கும் அன்பானது சிங்கம் புலி போன்ற விலங்குகளையும் விரட்டும் சக்தியை கொண்டது. இதில் சிறுத்தை என்ன விதிவிலக்கா! மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராபூர் என்ற மாவட்டத்தில் வனப்பகுதி ஒன்று உள்ளது. அந்த வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அச்சத்துடன் இருந்தனர்.
இந்நிலையில் அந்த வனப்பகுதி வழியாக ஜூனோனா என்ற கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா மோஸ்ராம் எனும் பெண் தனது ஐந்து வயது மகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிர்ச்சியூட்டும் வகையில் சிறுத்தை ஒன்று திடீரென அந்த சிறுமியை தாக்க முயற்சித்தது. அப்போது அர்ச்சனா மிகவும் அதிர்ச்சியில் இருந்தார். முதலில் பயந்த அர்ச்சனா மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் துணிச்சலுடன் அங்கிருந்த மூங்கில் குச்சியை எடுத்து சிறுமியை தாக்கிக் கொண்டிருந்த சிறுத்தையை தாக்கினார். இதனால் சிறுத்தை சிறுமி மீதான தாக்குதலை விட்டு விட்டு அர்ச்சனாவின் பக்கம் திரும்பியது. அர்ச்சனா மிகவும் பயந்து போனார். இருப்பினும் தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் விடாமல் மேலும் மூங்கிலால் அந்த சிறுத்தையை தாக்கினார். இதனால் அந்த சிறுத்தை அங்கிருந்து ஓடியது. மூங்கில் குச்சியை வைத்தே தன் குழந்தையை சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றி உள்ளார் அர்ச்சனா. சிறுத்தை தாக்கியதால் குழந்தையின் தாடைப் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதையே தொடர்ந்து அந்த சிறுமியை நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் வனத்துறையினர் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த ஐந்து வயது சிறுமியின் மருத்துவமனை சிகிச்சைக்காக இழப்பீடாக குறிப்பிட்ட தொகையை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து ஜூலை 19ஆம் தேதி சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர். தனது ஐந்து வயது மகளை தாக்கிய சிறுத்தையை மூங்கில் குச்சியால் அடித்து விரட்டிய தாயின் துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.