இனி விண்ணில் இருந்து பூமியை ரசிக்கலாம்! அதுவும் பலூன் மூலம் சுற்றுலா!
அமெரிக்காவின் அரிசோனாவைத் தளமாகக் கொண்ட வேர்ல்டுவியூ என்னும் நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் பலூன் தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை அதாவது மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல ஒரு திட்டத்தை தற்போது செயல்படுத்தி உள்ளது. வெப்பக் காற்றில் இயங்கும் பலூன் போல் இல்லாமல் ஹீலியம் வாயுவை நிரப்பி பல ஆயிரம் அடி உயரத்துக்கு பறக்க விடவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் இந்த சுற்றுலா சேவையை தொடங்குவதாகவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சீனப்பெருஞ்சுவர், எகிப்தின் பிரமிடு, மற்றும் அமேசான் காடுகள் உள்ளிட்ட இடங்களை பயணிக்கும் மக்களான நாம் விண்ணில் இருந்து பார்க்கும் வகையில் பயணங்களை ஏற்பாடு செய்யப்படும் என்றும் வேர்ல்டுவியூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பயணம் 6 முதல் 8 மணி நேரம் வரை நீடிக்கும் என்றும் பயணிகளை குறைந்தது ஒரு லட்சம் அடி உயரத்திற்கு அழைத்துச் செல்லும் அளவு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது முப்பதாயிரம் மீட்டர் உயரத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல இந்நிறுவனம் தற்போது கணித்துள்ளது. வெர்ஜின் கெலக்டிக் (Virgin Galactic) , புளு ஆரிஜின் (Blue Origin) போன்ற நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா செல்ல மட்டும் 2 லட்சம் அமெரிக்க டாலர்களை வசூலித்து வருகிறது. இந்நிலையில் பலூனில் சென்று பார்க்க வேர்ல்டுவியூ நிறுவனம் வெறும் 50 ஆயிரம் டாலர்களை மட்டுமே நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக இது மக்களிடம் வரவேற்பை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.