Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு!

#image_title

கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் தீர்ப்பு.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை அடுத்த சித்தேரவு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திரனுக்கு, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மற்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அந்த பெண் கர்ப்பமானார்.

இதைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு சித்தையன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் ராமச்சந்திரன் அதை ஏற்கவில்லை. இதையடுத்து 2 பேரும் சேர்ந்து குழந்தையை கொன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஓடையில் புதைத்து விட்டனர்.

இதுதொடர்பாக ராமச்சந்திரன் மற்றும் அந்த பெண் மீது பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராமச்சந்திரன் மீதான வழக்கு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திலும், அந்த பெண் மீதான வழக்கு மகிளா கோர்ட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை நீதிபதி சரவணன் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் சூசைராபர்ட் ஆஜராகி வாதாடினார்.அரசு தரப்பில் 14 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. மேலும் குழந்தையின் டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கையை போலீசார் சமர்ப்பித்தனர்.

இந்தநிலையில் வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி சரவணன் இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரனுக்கு இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் (கொலை) ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், 318 பிரிவின் கீழ் (குழந்தை உடலை மறைத்தல்) ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, சிறை தண்டனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version