இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை… சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவு!
இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது.
சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும். அப்போதில் இருந்து லிங்குசாமிக்கு இறங்குமுகமாகவே உள்ளது.
இந்நிலையில் முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி பிலிம்ஸ் நிறுவனத்திடம் லிங்குசாமி ‘எண்ணி ஏழே நாள்’ என்ற திரைப்படத் தயாரிப்பிற்காக 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தில் கார்த்தி மற்றும் சமந்தா நடிக்க இருந்தனர். ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்நிலையில் வாங்கிய கடனுக்காக லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிவிட்டதால் பிவிபி நிறுவனம் அவர் மேல் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இன்று சென்னை, சைதாபேட்டை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியவர்களுக்கு 6 மாத காலம் சிறை தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். இதனால் லிங்குசாமி கைது செய்யப்படுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து லிங்குசாமி மேல் முறையீடு செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.