Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் வழங்கிய முக்கிய விளக்கம்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என்று பொது மக்களை எச்சரிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை வழங்கியுள்ளது.

தேர்தலில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சட்ட திருத்தம் சென்ற வருடம் நடைமுறைக்கு வந்தது. அவரவர் சொந்த விருப்பத்தினடிப்படையில் இந்த இணைப்பை செய்து கொள்ளலாம் எனவும், இது கட்டாயமில்லை என்றும், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

ஆகவே ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது கட்டாயம் அப்படி இனைக்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் மிரட்டுவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே குற்றம் சாட்டினார். இது குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதம் நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவம் 6.பி கட்டாயமில்லை என்று தெரிவித்துள்ளது.

சொந்த விருப்பத்தினடிப்படையில் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்திற்காக யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாது என்றும், தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

Exit mobile version