தமிழக எல்லையில் உள்ள காவிரி கரையோர கிராமங்களில் கர்நாடகாவில் இருந்து பரிசலில் வரும் மதுபானங்களை குடிமகன்கள் இரட்டை விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர்.
ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் குடிமகன்கள் தவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் ஊரடங்கு 12 மணிக்கு மேல் அமல் படுத்தப் படுவதால் அங்கு மதுபான கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் 12 மணி வரை தளர்வுகள் கொடுக்கப்படுகின்றன. மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு அமல் படுத்தப் படுகின்றது. அதனால் மதுபான கடைகள் 12 மணி வரை செயல்படுகின்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் உள்ளது. சந்தன கடத்தல் வீரப்பன் பிறந்த கோபிநத்தம் அங்கிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள மதுபான கடைகளில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்து இரு மாநில எல்லையில் ஓடும் காவிரி ஆற்றில் பரிசல் மூலம் கடந்து தமிழக எல்லை கிராமங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்கின்றனர். இரட்டை விலை கொடுத்து மதுபான பிரியர்களும் வாங்கி குடிக்கின்றனர். தடைகள் அனைத்தையும் மீறி மதுபான விற்பனை மிகவும் ஜோராக நடைபெறுகிறது.
இந்த கடத்தலை தடுக்க சேலம் தலைமை எஸ்பி தலைமையில் தனிப்படை போலீசார் மற்றும் கொளத்தூர் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.