Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரிஷி சுனக்கை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமரானார் லிஸ் டிரஸ்!

இங்கிலாந்தின் பழமை வாத கட்சியை சார்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவருடைய அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர்.

இதனால் அவர் பதவி விலகினார், இதனையடுத்து இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி பூதாகரமாக வெடித்தது. இதில் அந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராகயிருந்த லிஸ் ட்ரஸ் உள்ளிட்டோர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

தொடக்கத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவழியைச் சார்ந்த ரிஷி சுனக் அடுத்தடுத்த சுற்றுகளில் ஆதரவை இழந்து வந்தார். அதன் பிறகு பழமைவாத கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று இங்கிலாந்து நாட்டின் 3வது பெண் பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வாகியிருக்கிறார்.

இவர் இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர்கள் டேவிட் கேமரூன், தெரசா மே உள்ளிட்டோரின் அமைச்சரவையில் 2012 ஆம் ஆண்டு முதல் உணவு, குழந்தைகள் நலம், சுற்றுச்சூழல், கல்வி, உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் பெண்கள் சமத்துவத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர்.

சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார் இந்த நிலையில் தற்போது அவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.

Exit mobile version