Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தி தெரிந்தால் தான் லோன் !! இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரை எதிர்த்து திமுகவினர் போராட்டம் !!

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர், ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் இந்தி தெரியாததன் காரணமாக வங்கி கடன் கொடுக்க மறுத்ததால், திமுக கட்சியினர் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியில் வாடிக்கையாளராக உள்ள ஓய்வு பெற்ற மருத்துவர் டாக்டர்.பாலசுப்ரமணியம் வீட்டு கடன் கேட்டு சென்றுள்ளார்.பாலசுப்ரமணியம் சரியான ஆவணத்தை கொடுத்து கடன் கேட்டுள்ள போதும், உங்களுக்கு ஹிந்தி தெரியுமா ? என்று வங்கி மேலாளார் கேட்டுள்ளார்.

எனக்கு ஹிந்தி தெரியாது தமிழும் ஆங்கிலமும் தெரியும் என்று ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார்.அதற்கு வங்கி மேலாளர் நான் மகாராஷ்டிராவை சேர்ந்தவன் என்று கூறியுள்ளார்.”இதனால் என்ன எனக்கு கடன் கொடுங்கள் “என்று டாக்டர் பதில் அளித்த பின்பும், இந்தி தெரியாவிட்டால் கடன் கொடுக்க இயலாது என்று வங்கி மேலாளர் வெறுப்புடன் கூறியுள்ளார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் ,திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பணி புரிய வந்த ஒருவர் தமிழ் கற்றுக் கொள்ளாமல், எங்கிருந்தோ வந்த ஹிந்தி தெரியாததால் கடன் கொடுக்க மறுத்து விட்டார்கள் என்றும், ஓய்வுபெற்ற பாலசுப்பிரமணியம் படித்தவர் ஒருவரை இந்தி தெரியவில்லை என அவமானப்படுத்தியதாகவும், படிக்காத பாமர மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்று இரா மணிமாறன் கூறியுள்ளார்.

இதனால் கங்கை கொண்ட சோழபுரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பாக ஒன்றிய செயலாளர் இரா.மணிமாறன் தலைமையில் ,திமுக கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் முன்னணியில் வங்கி மேலாளர் இந்தித்திணிப்பு நடவடிக்கையை கண்டித்தும் அவரை பணியிடமாற்றம் செய்யவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் டாக்டர் பாலசுப்பிரமணியம் வங்கி மேலாளர் அவமானப்படுத்தியதைக் குறித்து மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version