Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

உள்ளாட்சி தேர்தல் உறுதியானது! நவம்பரில் தமிழக மக்களுக்கு திருவிழா

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நவம்பர் மாதம் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உறுதியாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2016ம் ஆண்டு முதல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் தொடர்ந்த அவகாசம் கோரி வந்தன. அதே நேரத்தில், ஊராட்சி அலுவலர்களின் கால அவகாசத்தை மட்டும் தொடர்ந்து நீட்டித்து வந்தது. இதனால், திமுக உட்பட சிலர் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் பணிகளைத் தொடங்கியது. மேலும், நவம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்தது.

இதனையடுத்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சமீபத்தில் அளித்த பேட்டியில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திடம் வாக்குப்பதிவு இயந்திரம் கேட்கப்பட்டதாக கூறினார். இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பீகார், கர்நாடகா மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கவும் மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணி அக்., 15ல் முடிவடையும் என்றும், நவம்பரில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும் எனவும் தமிழக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version