உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு! ஆளுநரிடம் புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
133

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை சந்தித்து இருக்கிறார். அவருடன் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகித்து வரும் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் சென்றிருந்தார்கள்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கமாக தெளிவாக புகார் மனுவை கொடுத்திருக்கின்றோம். இந்த தேர்தலில் ஆளும் கட்சியான திமுக தில்லுமுல்லு செய்து ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி இருக்கிறது. வெற்றி பெற்றவர்களை எல்லாம் தோல்வியுற்றதாக அறிவித்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தேர்தல் பணிகளை முறையாக கவனிக்கவில்லை என்று தெரிவித்திருப்பதோடு எங்கள் கட்சியினர் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திக்க போனபோது அவர்களை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. திமுகவினர் வெற்றிபெற்றால் உடனுக்குடன் அறிவித்த தேர்தல் அதிகாரிகள் அதிமுகவினர் வெற்றி பெற்றால் அறிவிப்பை வெளியிடுவதற்கு தாமதம் செய்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். அதோடு பல்வேறு இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அதிமுகவினரை தோல்வியுற்றவர்கள் ஆக அறிவித்திருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.

எந்தெந்த பகுதிகள், என்னென்ன புகார்கள் என்பதை எல்லாம் விளக்கமாக பட்டியல் போட்டு ஆளுநரிடம் வழங்கி இருக்கின்றோம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

தேர்தல் இவ்வாறு முறைகேடாக தான் நடக்கும் என்று தெரிந்துதான் நாங்கள் முன்பாகவே தேர்தல் ஆணையத்தையும், நீதிமன்றத்தையும், நாடி இருந்தோம் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை அரசாங்கமும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதற்கு மாறாக ஆளுங்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற என்னென்ன வழிமுறைகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.