ஊரடங்கால் 400 கோடி இழப்பு – சம்பளம் கொடுக்க திண்டாடும் திருப்பதி தேவஸ்தானம்
கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் கூடும் கோயில்கள், வழிபாட்டுத்தலங்கள், திரையரங்குகள், கடற்கரை, பூங்காக்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
கடந்த 120 ஆண்டுகளில் மூடப்படாத திருப்பதி, திருமலையில் உள்ள வேங்கடாசலபதி கோயிலுக்குள் நுழைய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கால் சுமார் 400 கோடி வரை வருமான இழப்பைச் சந்தித்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் திண்டாடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 300 கோடி வரை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பிற மாதாந்திர செலவுகளாகச் செய்துள்ள தேவஸ்தானம் 400 கோடியளவிற்குத் தேவஸ்தானத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைகளுக்கும் இதர நிறுவனங்களுக்கும் செலவு செய்கிறதாம். இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீளப் பலவேறு வழிகளை ஆராய்ந்து வருகிறது.
மாதம் ஒன்றுக்கும் சுமார் 120 கோடி ரூபாயை சம்பளத்திற்கு மட்டும் செலவு செய்யும் தேவஸ்தானம் நடப்பு ஆண்டிற்கு 1385.06 கோடி தேவைப்படும் எனக் கணக்கிட்டுள்ளது.
தேவஸ்தானம் கோயிலுக்குச் சொந்தமான 8 டன் அளவிலான தங்கத்தை இருப்பாகவும் , 14000 கோடி ரூபாயை வைப்பு நிதியாகவும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.