சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு

0
147

சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் பாதிப்பானது கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஏற்கனவே உள்ள ஊரடங்கு உத்தரவில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை மற்றும் அதன் அருகிலுள்ள செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 30 ஆம் தேதி வரை மீண்டும் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 12 நாட்களிலும் அந்த பகுதிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அப்பகுதிகளில் மருத்துவத் தேவை தவிர மற்ற எந்த தேவைக்காகவும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்த நாட்களில் காய்கறி, மளிகைக் கடைகள், நடமாடும் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக உணவகங்களுக்கு காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் சேவை வழங்கலாம் என்றும், ஆனால் தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது

மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த முழு ஊரடங்கின் போது சென்னை மற்றும் அதனை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவைக்கு பயன்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வசிக்கும் 2 கிலோ மீட்டர் சுற்றளவு தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் படி மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் 33% பணியாளர்கள் வேலைக்குச் செல்லும் போது அவர்களின் அடையாள அட்டையை கண்டிப்பாக காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சென்னைக்கு வெளியே சென்று பணிபுரியும் பணியாளர்கள் இந்த முழு ஊரடங்கு காலத்தில் சென்னை எல்லைக்கு வெளியே செல்ல அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.