Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில் வரும் மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவில் தீவிரமாகும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்தது.  இதனையடுத்து இந்த ஊரடங்கு உத்தரவானது 21 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டிற்கு வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனையடுத்து நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி நிலைமையை உணர்ந்து ஊரடங்கு உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். குறிப்பாக நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் இந்த மாத இறுதி வரை தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிதுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுக்க உள்ள மாவட்டங்கள் அனைத்தையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று டெல்லியில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள், ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள், பசுமை மண்டல மாவட்டங்கள் என்று நாடு முழுவதும் உள்ள மாவட்டங்கள் வகைப்படுத்தப்படும். கொரோனா வைரஸ் பரவுவது அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகள், ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள் என்ற பட்டியலின் கீழ் வரும்.

கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தும் அது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய பகுதிகள் ஹாட்ஸ்பாட் இல்லாத மாவட்டங்கள் என்ற பிரிவின் கீழ் வரும் என்றும், சுத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பசுமை மண்டலங்கள் என்ற பிரிவின் கீழ் வரும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை அமைச்சரவை செயலாளர் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள், சுகாதாரத்துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட எஸ்பி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் கிடைக்கப் பெற்ற தகவல்களை கொண்டு நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதற்கு வசதியாக நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் எவையெல்லாம் பிரச்சனை இல்லாத இடங்கள் என்று வகைப்படுத்தும் பணிகளை அரசு தற்போது தொடங்கிவிட்டது என்பதை இன்று சுகாதாரத்துறை இணைச் செயலாளர் அளித்த பேட்டி உறுதிப்படுத்தி உள்ளது.

இதன் மூலமாக மத்திய அரசு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பதும், மேலும் நாட்டில் ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் தொழில் வளர்ச்சி மீண்டும் துவங்கும் என்பதும் இதன் மூலமாக தெளிவாகிறது.

Exit mobile version