என் உடம்புக்கு என்னனு பாருங்க – சிகிச்சைக்கு தனியாக வந்த 3 வயது சுட்டி குழந்தை!
இந்தக்கால குழந்தைகள் பிறக்கும் போதிலிருந்தே படுசுட்டியாக இருந்து மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த குழந்தையோ வேற லெவல்.
கொரோனா தொற்று இரண்டாவது அலையாக உருவெடுத்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கொரோனா தொற்றுக்கு சிறு குழந்தைகளும் பலியாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த தொற்றில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்கே அதிகம் உள்ளது.
ஆனால் பலர் இந்த தொற்றின் வீரியம் தெரியாமல் காய்ச்சல் சலி ஏற்பட்டாலும் மருத்துவர்களை அணுகாமல் வீட்டு வைத்தியம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சுய விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை உணர்ந்த 3 வயது சிறுமி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். ஆம், 3 வயதான லிபாவி என்ற சிறுமி நாகாலாந்து மாநிலம் ஜுன்ஹிபோட்டோ மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
இவருக்கு கடந்த 2ஆம் தேதி இரவு முதல் சளி இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் நிலத்தில் வேலைக்கு சென்றுவிட்டதால் சிறுமி தெளிவாக யோசித்து நேராக அந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு மாஸ்க் போட்டு கொண்டு வந்த சிறுமியிடம் மருத்துவர் விசாரித்தபோது தனக்கு சளி இருப்பதாக கூறியுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தை, நாகாலாந்தின் பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் யெப்தோமி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் தற்போது பெரியவர்களே கொரோனா தடுப்பூசி போடவும் கொரோனா சோதனை செய்து கொள்ளவும் தயக்கம் காட்டி வரும் நிலையில் சிறிய குழந்தை லிபாவி நமக்கெல்லாம் நல்லதொரு வழியை காட்டியுள்ளார்.
பொறுப்புணர்வுதான் தற்போதைய பெரிய தேவையாகும். அந்த குழந்தை விரைவில் குணமாக வாழ்த்துகள் என தெரிவித்து அந்த புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தனுக்கும் ஹாஸ்டேக் செய்துள்ளார். இந்த ட்வீட்டை தற்போது நெட்டிசன்களும் பாராட்டி வருகிறார்கள்.