Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

காதலி பேசாத காரணத்தால் காவலர் பூத்தில் குண்டுவீசிய காதலன் கைது!

காதலித்த பெண் தன்னுடன் பேசாத காரணத்தால் அவர் மீது வீசிய பெட்ரோல் குண்டு போலீஸ் பூத்தில் விழுந்து எரிந்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டை பாவா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் சாப்பாடு டெலிவரி செய்யும் ஊழியராக இருந்து வருகிறார். இவர் தனது கல்லூரி காலத்தில் இருந்து ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சில நாட்களாக அப்பெண் இவரிடம் சரியாக பேசாமல் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னிடம் பேசாத காரணத்தால் அப்பெண்ணின் மீது பெட்ரோல் குண்டை வீசுவதற்கான திட்டத்துடன் காதலியை தேடி அவரது கல்லூரிக்கே இருசக்கர வாகனத்தில் வெங்கடேஷ் சென்றுள்ளார். நீண்ட நேரம் கல்லூரி வெளியே காத்திருந்தும் அப்பெண் வெளியே வரவில்லை. இதனால் வெறுப்பான வெங்கடேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை தூக்கி கவனமே இல்லாமல் ஒரு ஓரமாக வீசினார்.

ஓரமாக விழுந்த பெட்ரோல் குண்டானது அருகில் இருந்த போலீஸ் பூத்தில் பற்றி எரிய ஆரம்பித்தது. போலீஸ் பூத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் எதுவும் நடக்கவில்லை. திடீரென தீப்பற்றி எரிவதை பார்த்த பொதுமக்கள் பதட்டத்துடன் தூரமாக நின்றனர். நிலைமை மோசமாவதை அறிந்த வெங்கடேஷ் அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் தீயினை கட்டுபடுத்தி, தப்பியோடிய வெங்கடேஷை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் வாகன நம்பரை வைத்து ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்; வெங்கடேஷ் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவர் அவரது காதலி தற்போது பி.காம் படிப்பதாகவும் கூறினர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான காதலனை அப்பெண் பலமுறை திருத்த முயற்சித்தும் பலனில்லை. ஆகவே, தான் வேறொருவரை காதலிக்கபோவதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்டு காதலி மீது பெட்ரோல் குண்டு வீச பிளான் செய்ததாக காவல்துறையின் விசாரணையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே சில வழக்குகள் வெங்கடேஷ் மீது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அவளை கொலை செய்ய வேண்டும் என்னை விடுங்கள் என்று தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வெங்கடேஷ் புலம்பியதாக கூறப்படுகிறது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version