சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த விஜய் சேதுபதியின் மாமனிதன்
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றி பெறவில்லை.
விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது. ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.
இதனால் ஜூலை 15 ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியானது. திரையரங்குக்கு நேர்மாறாக ஓடிடியில் படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. அதிகளவில் பார்வையாளர்கள் இந்த படத்தைப் பார்த்து வருகின்றனர்.
இந்த வரவேற்பை அடுத்து ஆஹா தமிழ் ஓடிடி இப்போது இயக்குனர் சீனு ராமசாமியை அணுகி நேரடி ஓடிடி படம் ஒன்றை இயக்கித் தர கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நல்ல படம் என்ற பாராட்டப்பட்டும் திரையரங்குகளில் ஆதரவு கிடைக்காத மாமனிதன் இப்போது ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இப்போது சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த திரைப்படம் விருதுகளைப் பெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தாகூர் திரைப்பட விழாவில் மாமனிதன் திரைப்படம் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது. இதில் சிறந்த நடிகராக விஜய் சேதுபதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரையரங்கில் தோல்வி அடைந்தாலும் ஒரு நல்ல படம் எப்படியாயினும் பார்வையாளர்களை சென்று சேரும் என்பதற்கு மாமனிதன் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.