மத்தியபிரதேச மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில நாட்களாக நெருக்கடி சூழ்ல் நிலவுகிறது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான கமல்நாத் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.
மத்திய பிரதேச காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கிவிட்டு அதனை கைப்பற்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா முயற்சி செய்து வருகிறார். கமல்நாத் மூத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா 17 எம்எல்ஏக்களுடன் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.
இதில் திடீர் திருப்பமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.
இந்த நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையை இல்லாமல் பாஜகவுக்கு பெரும்பான்மை சூழலையும் உருவாக்கியது.
இதனையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் 107 பேரும் கலந்து ஆலோசித்தனர். அதன் பிறகு அனைவரும் 5 சொகுசு பேருந்துகளில் ஏறி டெல்லி புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
பரபரப்பான இந்த சூழலில் மேலும் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யாமல் இருக்க காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 92 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய நிகழ்வுகள் கிடையாது. கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா ஆட்சி அமைக்க தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா கையாண்ட இந்த பாணியையே மத்திய பிரதேச காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் பின்பற்றி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.