Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

”ஓட்டுப்போட்டால் நிலாவுக்கே சுற்றுலா அழைத்து செல்வேன்” – இது லிஸ்ட்லையே இல்லையே..!

தாங்கள் வெற்றிப்பெற்றால் இலவசமாக அதை செய்வோம், இதை செய்வோம் என்று பிரதான கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீச மதுரை வேட்பாளர் ஒருவர் நிலவுக்கு சுற்றுலா அழைத்து செல்வோம் என்று உலகமே வியக்கும் வகையில் அதிரடி வாக்குறுதிகளை அளித்து அனைவரையும் பிரமிக்க வைத்தார்.

மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த துலாம் சரவணன் என்பவர் தனியார் தொலைக்காட்சியில் வேலைபார்த்து வரும் நிலையில் மதுரை தெற்குத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு குப்பைத் தொட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. வழக்கமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பல திட்டங்களை தொகுதி மக்களுக்கு அறிவித்து வாக்கு சேகரிக்க துலாம் சரவணனோ விநோதமான அறிவிப்புகளை தனது வாக்குறுதிகளாக அளித்துள்ளார்.

அனைவருக்கும் இலவசமாக ஐ-போன் வழங்குவது முதல் நிலவுக்கு சுற்றுலா அழைத்து செல்வது வரை தனது பிரமாண்ட வாக்குறுதிகளை அளித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

சுயேட்சை வேட்பாளர் சரவணின் வாக்குறுதிக்கள்:

1. அனைவருக்கும் இலவசமாக ஐ-போன் வழங்கப்படும்

2. அனைவருக்கும் நீச்சல்குளம் வசதியுடன் 3 மாடி வீடு கட்டித்தரப்படும்

3. வீடு ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்

4. அனைத்து வீடுகளுக்கும் ரூ.20 லட்சம் மதிப்புடைய கார் ஒன்று வழங்கப்படும்

5. ஒவ்வொரு வீட்டிற்கு சிறிய வகை ஹெலிகாப்டர் ஒன்று வழங்கப்படும்

6. இல்லத்தரசிகளுக்கு வீட்டில் வேலை செய்ய ரோபோ ஒன்று வழங்கப்படும்

7. பெண்களின் திருமணத்திற்கு 100 சவரன் தங்க நகை வழங்கப்படும்

8. இளைஞர்கள் சுயத்தொழில் தொடங்க ரூ.1 கோடி வழங்கப்படும்

9. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்

10. போக்குவரத்திற்கு கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும்

11. தொகுதி மக்களை சுற்றுலாவாக 100 நாட்கள் நிலவுக்கு செல்லப்படும்

12. தொகுதி எப்பொழுதும் குளுகுளுவென இருக்க 300 அடி உயரத்தில் செயற்கை பனிமலை அமைக்கப்படும்

13. தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும்

இது தொடர்பாக பேசிய சரவணன், ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் பதவி காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாஇ செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி விட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதிகளை அள்ளித்தெளிப்பதை சுட்டிக்காட்டியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த விநோத வாக்குறுதிகளை அளித்ததாக கூறினார்.

தான் வெற்றிப்பெற்றால் தனது தொகுதியின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, பாதாள சாக்கடை திட்டங்களை முறையாக செயல்படுத்துவேன் எனவும், தொகுதி மக்களுக்கு நூலகம், இணையதள வசதி, விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி கொடுப்பேன் என்றும் கூறினார்.

Exit mobile version