அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

0
132

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் தேர்வெழுதும் மொழியில் தமிழ் தவிர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

தபால்துறை காலி பணியிடங்களுக்கான தேர்வுகள், இன்று நாடு முழுவதும் நடைபெறுகின்றன. தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னர், இனி தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்றும், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனவும் மத்திய அரசின் தபால் துறை அறிவித்தது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி உள்ளிட்ட மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக, 
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால், ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும், எனவே, எழுத்துத் தேர்வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். மேலும் தபால் துறை தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதும் வகையில், மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு, நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, மகாதேவன் ஆகியோர், இன்று எழுத்துத்தேர்வு நடத்த தடையில்லை என தெரிவித்தனர். எனினும் தேர்வு முடிவுகளை வெளியிட, தடை விதித்த நீதிபதிகள், தேர்வுகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் ஆணையிட்டு, வழக்கை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

கடந்த முறை நடைபெற்ற தபால்துறை தேர்வின் தமிழ்மொழி தாளில் வடமாநில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.