Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!!

#image_title

உரிமையை போராடி வென்ற  மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை மேயர்!

மதுரை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில் மதுரை துணை மேயரின் பெயர் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, தற்போது கல்வெட்டில் துணை மேயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் உள்ள மதுரை மேற்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின பவள விழாவை குறிக்கும் வகையில் ஒரே இடத்தில் 2 புதிய கல் வெட்டுக்கள் பதிக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டில் மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரும், மதுரை மாநகராட்சி மேயர் பெயரும், மற்றொரு கல்வெட்டில் மேற்கு மண்டல உதவி ஆணையாளர், மண்டல தலைவர் பெயரும் இடம் பெற்று இருந்தது. ஆனால் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை துணை மேயர் நாகராஜன் அவர்களின் பெயர் கல்வெட்டில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் உள்ளிட்டோர் முகாம் முடிந்து சென்ற நிலையில் அப்போது அலுவலகத்திற்கு வந்த துணை மேயர் நாகராஜன் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். துணை மேயர் என்கிற தன் உரிமை, தொடர்ந்து பறிக்கப்படுவதாகவும் உரிய அங்கீகாரம் தனக்கு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட கல்வெட்டு சுவர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

பிரச்னை குறித்து அறிந்த மேயர் இந்திராணி துணை மேயர் நாகராஜன் அவர்களை, தொலைபேசி வாயிலாக தொடர்பு தங்கள் பெயரும் நிச்சயம் இடம்பெறும் என்று வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டார். தன் உரிமை போராட்டத்தின் விளைவாக தற்போது துணை மேயர் பெயருடன் கூடிய புதிய கல்வெட்டு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் குறைகளை கேட்டு அதை சரி செய்வதில், மக்கள் பிரச்சனை என்றால் ஓடி,ஓடி சென்று மக்கள் பணி ஆற்றுவதிலும் திறம்பட செயலாற்றுவதால் மதுரை துணை மேயர் நாகராஜன் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version