ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை சம்பந்தமாக குடியரசுத் தலைவருக்கு மதுரை நாடாளுமன்ற தொகுதியின் எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார் அதில் அவர் தெரிவித்திருப்பதாவது வணக்கத்திற்கு உரிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு,
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்களுடைய வாழ்க்கையை கழித்து வருகிறார்கள்.
அந்த ஏழு பேரின் வருத்தத்தை எடுத்துரைக்கவும், அவர்களுடைய விடுதலைக்கு ஏற்பாடு செய்யுவும் தங்களிடம் கோரிக்கை வைக்கவே இந்த கடிதத்தை எழுதி இருக்கின்றேன்.
இந்திய சட்ட அமைப்பின் படி வாழ்நாள் சிறை என்பதன் காலம், இதுவரை வரையறுக்கப் படவில்லை என்றாலும் பொதுவாக 14 ஆண்டுகள் என்பது ஒரு நியதியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அந்த முறையில் பார்த்தோமானால், இந்த ஏழு பேரும் இது வாழ்நாள் தண்டனைகளுக்கு மேலாக தண்டனையை அனுபவித்து தொடர்ச்சியாக சிறையில் இருந்து வருகிறார்கள்.
எனவே மக்கள் இடையிலே இவர்களுடைய விடுதலைக்கான ஏக்கம் இருக்கின்றது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விழைகிறேன்.
சிறிது காலத்திற்கு முன்பு உச்சநீதிமன்றம் இப்பிரச்சனையில் ஆளுநர் முடிவெடுக்கலாம், என்று தன்னுடைய கருத்தை வெளியிட்ட தையும் இங்கே சுட்டிக்காட்ட விழைகிறேன்.
இந்த பிரச்சனையில் இனிமேலும் தாமதிக்காமல், உடனே அந்த 7 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
அவர்கள் மிக மிக அதிகமான தண்டனையை முன்பே அனுபவித்து இருக்கிறார்கள், என்ற அடிப்படையில் இந்த விடுதலை வழங்க வேண்டும் என மிகுந்த பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.